Saturday, August 9, 2014

ஆரோக்கியப் பெட்டகம்: நெல்லிக்காய்

ஆரோக்கியப் பெட்டகம்: நெல்லிக்காய்

“An apple a day keeps the doctor away எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தினமொரு ஆப்பிள் சாப்பிடுவதென்பது எல்லோருக்குமா சாத்தியம்?  ஆப்பிளுக்கு இணையாக, ஏன், ஆப்பிளை விட அதிகமான நற்குணங்கள் வாய்ந்தது நெல்லிக்காய். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே ஆயுளும் ஆரோக்கியமும் இளமையும் நீடிக்கும். 


அதியமானால் ஔவையாருக்கு வழங்கப்பட்ட நெல்லிக்கனிக்கு, அன்று முதல் இன்று வரை மாறாத புகழ் உண்டு. ‘‘ஆந்திராவில் டிசம்பர் மாதம் செய்யப்படுகிற நெல்லிச்செட்டு பூஜை ரொம்பவும் பிரபலம். கார்த்திகை மாதம் சோம வாரத்தில் வீட்டிலோ, சிவன் கோயிலிலோ எங்கே நெல்லிமரம் இருந்தாலும் விளக்கேற்றி பூஜை பண்ணுவார்கள். பக்தி என்கிற விஷயத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்தப் பூஜைக்குப் பின்னால், நெல்லி மரங்களைக் காப்பாற்றுகிற சின்ன முயற்சி தெரியும்...” ஆன்மிகத்தினுள் ஒளிந்திருக்கும் அறிவியல் தகவலுடன் பேச ஆரம்பிக்கிறார் பிரபல சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.

‘‘நெல்லிக்காயை காயகல்ப மூலிகை என்றே சொல்லலாம். நரை, திரை, மூப்பு விலக்கும் அற்புதம் இது. எத்தனையோ முறை நெல்லிக்காய் ருசித்திருப்பீர்கள்... அதில் எத்தனை சுவைகளை உணர்ந்திருப்பீர்கள்? அடுத்த முறை அதைக் கவனியுங்கள். முதல் கடியில் துவர்ப்பு, அடுத்து லேசான உப்பு, பிறகு புளிப்பு, பிறகு உவர்ப்பு, கார்ப்பு என 5 சுவைகளையும், கடைசியாக நெல்லிக்காயை முழுவதும் உண்டு முடித்து தண்ணீர் குடிக்கிற போது ஆறாவதாக இனிப்புச் சுவையையும் உணரலாம். அறுசுவை களையும் தன்னுள்ளே கொண்ட ஒரே காய் நெல்லிக்காய்.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மி.கிராம் வைட்டமின் சி சத்து உள்ளது. வைட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை மாதிரியான மற்றதை சமைக்காமல் அப்படியே சாப்பிட்டால்தான், முழுச் சத்தும் கிடைக்கும். ஆனால், நெல்லிக்காயில் மட்டும்தான், அதை எந்த வடிவத்தில் மாற்றினாலும் வைட்டமின் சி இழப்பு ஏற்படுவதில்லை. காய வைத்தாலோ, வேக வைத்தாலோகூட அதன் வைட்டமின் சி அப்படியே இருக்கும். வைட்டமின் சி சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடிய ஸ்கர்வி என்கிற சருமப் பிரச்னைக்கு நெல்லிக்காய் மிகச் சிறந்த மருந்து. தினம் ஒரு நெல்லிக்காயை சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு சாதாரண காய்ச்சல், சளி, இருமல் பிரச்னைகள் வராது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.

நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்புச் சத்து, தாதுச் சத்து, இரும்புச் சத்து முதலியவை அடங்கியுள்ளன. ரத்தத்தில் கொலஸ்டிரால் படிவதையும், ரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தையும் நெல்லிக்காய் விலக்குகிறது. மூளை வளர்ச்சிக்கும் நெல்லிக்காய் ஏற்றது. நெல்லிக்காயில் நீர்ச்சத்தும் அதிகம். மருத்துவ குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்பதால் பற்களும் ஈறுகளும் பலப்படுவதோடு, வாய் துர்நாற்றமும் போகும்.  நெல்லிக்காய்க்கு பசியைத் தூண்டும் உணர்வு உண்டு. நெல்லிக்காய்க்கு கொழுப்பை விரட்டும் குணமும் உண்டு என்பதால் பருமன் பிரச்னை உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் கொழுப்பு கரையத் தொடங்கும்.

புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் ஆற்றலை உடல் வளர்த்துக் கொள்ளவும் தினம் ஒரு நெல்லிக்காய் கொள்கை உதவும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு மிக முக்கிய இடமுண்டு. அவர்களது பெரும்பாலான மருந்துத் தயாரிப்புகளில் நெல்லிக்காயின் கலப்பு கட்டாயம் இருக்கும். மிகப் பிரபலமான திரிபலா சூரணம் கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றின் கலப்பே. இன்று வயது வித்தியாசமின்றி, எல்லாப் பெண்களையும் பாதிக்கிற பிரச்னை அனீமியா என்கிற ரத்த சோகை. ரத்த சோகையை விரட்ட இரும்புச் சத்து அவசியம். இரும்புச் சத்து உடலினுள் கிரகிக்கப்பட வேண்டும் என்றால் வைட்டமின் சி அவசியம். எனவே, ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.”

இப்படியும் சாப்பிடலாம்...

முழு நெல்லிக்காயை 5 நிமிடங்களுக்கு ஆவியில் வைக்கவும். மிருதுவானதும், அதை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் துருவியில் துருவி, அதில் உப்பு, எலுமிச்சைச்சாறு பிசறி, 2 நாட்களுக்கு வெயிலில் காய வைத்து, பத்திரப்படுத்தவும். இதில் தினமும் சிறிது சாப்பிடலாம். இதோடு மிளகாய்த் தூள், சீரகத் தூள், வறுத்த உளுந்து, உப்பு சேர்த்து சாப்பாட்டு பொடியாக உபயோகிக்கலாம்.

பேரீச்சம்பழம், நெல்லிப் பொடி, தேன் இவற்றை தண்ணீரில் ஊற வைத்து ஜூஸ் போல செய்து அருந்தலாம்.

சீரகம், பச்சை மிளகாய், நெல்லிக்காயை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து உப்பு சேர்த்து வெயிலில் உலர வைத்து பாட்டிலில் போட்டு வைத்து சாப்பிடலாம். செரிமானத்துக்கான மருந்து இது.

நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டி, அதில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் குடித்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். 

1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் படிகாரம் சேர்த்து, அதில்  1 கிலோ நெல்லிக்காய்களை சில மணி நேரம் ஊற வைக்கவும். அது சற்றே கடினமாகும். பிறகு அதை எடுத்துத் துடைத்து, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஊசியால் குத்தவும். ஒன்றேகால் கிலோ சர்க்கரையில் 2 லிட்டர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு, அதில் நெல்லிக்காய்களைப் போடவும். முதல் நாள் 30 நிமிடங்கள் கொதிக்க விட்டு, அடுப்பை அணைக்கவும். மறுநாள் அதே தண்ணீரில் 20 நிமிடங்களும், 3வது நாள் மறுபடி அதே தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதில் ஒன்றேகால் டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட் சேர்க்கவும். அதைச் சேர்ப்பதால், சர்க்கரை படிகங்களாகாமல் இருக்கும். 20 நாட்கள் இதை அப்படியே ஊற வைக்கவும். 21வது நாள் நன்கு ஊறியிருக்கும். இதை தினமும் ஒன்று சாப்பிடலாம். தேவையானால் அதில் சிறிது தேன் கலந்தும் சாப்பிடலாம். அதே நெல்லிக்காயை உதிர்த்து, ஒரு வடிகட்டியில் போட்டு, 2 மணி நேரம் வடிய விட்டு, பிறகு அதில் பொடித்த சர்க்கரை, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் புரட்டி எடுத்து வைத்தும் அவ்வப்போது ஒன்றிரண்டு சாப்பிடலாம்.

100 கிராம் நெல்லிக்காயில்...


புரதம்                   0.58 கிராம்
கொழுப்பு                   0.1 கிராம்
கார்போஹைட்ரேட்    13.7 கிராம்
கால்சியம்                    50 மி.கி.
இரும்பு                   1.2 மி.கி.
தையமின்                   0.03 மி.கி.
தாதுச் சத்து    0.5 கிராம்
நார்ச்சத்து                    3.4 கிராம்
ஆற்றல்                    58
பாஸ்பரஸ்                    20 மி.கி.
வைட்டமின் சி    600 மி.கி.

ஆரோக்கிய ரெசிபி

நெல்லிக்காய் வரகரிசி சாதம்

என்னென்ன தேவை?


வரகரிசி - 150 கிராம், தண்ணீர் - 2 டம்ளர் (450 மி.லி.), பெரிய நெல்லிக்காய் - 5, பச்சை மிளகாய் - 4, வறுத்த வெந்தயத்தின் பொடி - 2 சிட்டிகை, மஞ்சள் தூள் -  டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,  முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் - 2.

எப்படிச் செய்வது?

  
2 டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடாக்கி, கொதி வந்ததும் கழுவிய வரகரிசி சேர்த்து 1 சொட்டு எண்ணெய் விட்டு மறு கொதி வந்ததும் தட்டால் மூடி குறைந்த தணலில் வைக்கவும். 2-5 நிமிடத்தில் ஈரம் வற்றி வெந்து விடும். ஆற விட்டு கைவிரல்களால் உதிர்த்து வைக்கவும். நெல்லிக்காயின்  கொட்டை நீக்கி, பல்பல்லாக நறுக்கி, அதோடு பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் சிறிய மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து வறுத்து கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்க்கவும். அரைத்த விழுதைக் கலந்து ஓரிரு நிமிடங்கள் கலந்து விடவும். வெந்தயப் பொடி சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும். அதோடு உதிர்த்த வரகரிசி சாதம் சேர்த்துக் கலந்து விடவும். நறுக்கிய கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

நெல்லிக்காய் தயிர் பச்சடி


என்னென்ன தேவை?


பெரிய நெல்லிக்காய் - 2, பச்சை மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - 1 கப், கெட்டித் தயிர் - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப, கடுகு, எண்ணெய் - தாளிக்க.

எப்படிச் செய்வது?


நெல்லிக்காயை விதை நீக்கி, பச்சை மிளகாயுடன் சேர்த்து ஒரு சொட்டு எண்ணெயில் வதக்கவும். அத்துடன் தேங்காய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து அதில் சேர்க்கவும். பரிமாறும் முன் தயிர் சேர்த்துக் கலக்கவும்.

No comments:

Post a Comment