கேரட் விலை உயர்ந்த வைரத்தின் தூய்மையைக் கணக்கிடும் போது கேரட் என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம். சாப்பிடுகிற கேரட்டுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும், வைரத்தைப் போல அத்தனை மேன்மையானது சாப்பிடுகிற கேரட். காய்கறிகளிலேயே மிகவும் உன்னதமான ஒன்று கேரட். அத்தனை வைட்டமின்களையும் சத்துகளையும் தன்னகத்தே கொண்ட அற்புதம். மஞ்சள் நிற உணவுகளைத் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது உணவியல். அதில் நம்பர் ஒன் இடம் கேரட்டுக்கே. மஞ்சள் கலந்த அதன் ஆரஞ்சு நிறத்தில்தான் அடங்கியிருக்கிறது கேரட்டின் மொத்த ஆரோக்கியமும்.
‘‘பார்க்கிறதுக்கு எத்தனை அழகானதோ, அதே அளவு ஆரோக்கியமானதும் கூட. ரொம்பவே சுவையான ஒரு காய். குழந்தைகள் கூட பச்சையா சாப்பிட விரும்புவாங்க. கூடியவரைக்கும் கேரட்டை பச்சையா சமையல்ல சேர்க்கிறது அதோட முழு சத்துகளையும் நமக்குக் கொடுக்கும். சமைக்கிறதால 20 முதல் 30 சதவிகித சத்துகளை இழக்க வேண்டி யிருக்கும்‘‘ என்கிற ஊட்டச்சத்து நிபுணர் பாமினி, கேரட்டின் பிளஸ், மைனஸ் பற்றித் தொடர்ந்து பேசுகிறார்.‘‘ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைஞ்ச அற்புதமான ஒரு காய் கேரட். இதுல எக்கச்சக்கமான பீட்டா கரோட்டின் சத்து இருக்கு. அது மட்டுமில்லை, இதய நோயாளிக்கு இதமானதும் கூட. இரும்புச் சத்து, மாவுச்சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ்னு ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை சத்துகளும் கேரட்ல இருக்கு. கேரட்ல புரதச் சத்து மட்டும் குறைவு.
அதனால கேரட்டை, புரதச் சத்து அதிகமுள்ள வேற உணவுகளோட சேர்த்து சமைக்கிறது மூலமா இதை ஈடுகட்டலாம். வேரில் காய்க்கிற காய்தான். ஆனாலும், வேர்ல விளைகிற மற்ற காய்கறிகளை சாப்பிடறதுல சொல்லப்படற ‘கண்டிஷன்ஸ் அப்ளை கேரட்டுக்கு கிடையாது. கேரட்ல இனிப்புச் சுவை அதிகமாச்சே... வேர் காய்கறியாச்சேங்கிற பயத்துல நீரிழிவு பாதிச்ச பலரும், அதைத் தவிர்க்கிறாங்க. ஆனா, நீரிழிவு உள்ளவங்களும் வாரத்துல 2 நாள் கேரட் சாப்பிடலாம். மத்தவங்க வாரத்துல 4 நாள் கேரட்டை சமையல்ல சேர்த்துக்கலாம்.
குறிப்பா கர்ப்பிணிகளும், தாய்ப்பால் கொடுக்கிற பெண்களும் இதை அவசியம் சாப்பிடணும். கேரட் நல்லதுங்கிறதால அதை தினமும் சர்க்கரையும் நெய்யும் சேர்த்து அல்வா மாதிரி செய்து சாப்பிடறது தவறு. முளைகட்டின பயறுகளோட சேர்த்து சமைச்சு சாப்பிடறப்ப முழுமையான சத்தான உணவு சாப்பிட்ட பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு கேரட்டை துருவி, சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்து அல்வா செய்து கொடுக்கலாம்.ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல... அழகுக்கும் உதவற தாவரம் கேரட். அதுல உள்ள வைட்ட மின் ஏ, எபிதீலியம்னு சொல்லக் கூடிய சருமத் திசுக்களோட வளர்ச்சியைத் தூண்டி, சருமத்தை அழகா, ஆரோக்கியமா வைக்குது. சரும நிறமும் கூடுது’’ என எல்லோருக்கும் கேரட் சாப்பிடும் ஆர்வத்தை அதிகரிக்கிறார் பாமினி.
எப்படி வாங்குவது?
உறுதியாக, நல்ல ஆரஞ்சு நிறத்தில் இருக்க வேண்டும். அதன் அடர் ஆரஞ்சு நிறமே அதில் அடங்கியிருக்கும் பீட்டா கரோட்டின் சத்தின் அளவுக்கான அறிகுறி. வெடிப்புகள் விட்ட, உடைந்த கேரட்டுகளை வாங்க வேண்டாம். கீரையுடன் கிடைத்தால் நல்லது. அந்தக் கீரையும் பச்சைப் பசேலென ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். கீரை இல்லாத கேரட் என்றால், அதன் இரண்டு முனைகளையும் பாருங்கள். கருமை படர்ந்திருந்தாலோ, ரப்பர் மாதிரி வளைந்தாலோ அது பழைய கேரட் என்று தெரிந்து கொள்ளலாம். சிறிய அல்லது மீடியம் அளவிலான கேரட்டுகளே சுலபமாக சமைக்க ஏற்றவை.
எப்படி பத்திரப்படுத்துவது?
கேரட்டை வாங்கியதும் கீரையுடன் இருந்தால் அதை வெட்டவும். கீரையை சூப், சாம்பார், கூட்டு என எதிலாவது சேர்த்துக் கொள்ளலாம். மேல் நுனியை வெட்டிவிட்டு, ஃப்ரிட்ஜில் வைக்கவும். பபுள்வ்ரேப் பேப்பர் இருந்தால் அதனுள் வைத்து சுற்றி வைத்தால் 1 வாரம் வரை புதிது போலிருக்கும். ஸ்டோர் செய்த கேரட்டை ஒரு வாரத்துக்குள் உபயோகித்து விடுவதே சிறந்தது.
எப்படியெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம்? தினசரி கேரட் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம். பச்சையாக மென்று தின்பது பற்களுக்கும் நல்லது. தினம் அப்படி சாப்பிட முடியாதவர்களுக்கு சில டிப்ஸ்...
கேரட்டை ஜூஸாக செய்து கொள்ளுங்கள். தினமும் ஏதோ ஒரு ஜூஸ் குடிக்கிற பழக்கம் உள்ளவர்கள் என்றால், எந்த ஜூஸ் உடனும் சிறிது கேரட் ஜூஸும் கலந்து குடிக்கலாம். கேரட்டை மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொண்டு, அதை பிரெட், சப்பாத்தி, தோசை மேல் தடவிக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். கேரட்டை தீக்குச்சிகள் மாதிரி மெலிதாகவோ, வட்ட வில்லைகளாகவோ நறுக்கி, உப்பு, மிளகுத்தூள் தூவி உணவு இடைவேளைகளுக்கு இடையில் கொறிக்கலாம்.
தினமும் குடியுங்கள் கேரட் ஜூஸ்!
கேரட்டை கழுவி, தோல் சீவாமல் அரைத்து, சர்க்கரை சேர்க்காமலும், வடிகட்டாமலும் அப்படியே குடிக்க வேண்டும். தினம் கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு....
ரத்த சோகை சரியாகி, ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். சுவாசப் பிரச்னை சீராகும். சளியும் தொண்டைக்கட்டும் குணமாவதுடன், ஆஸ்துமாவுக்கு காரணமான தொற்றைத் தவிர்க்கும். கேரட்டுடன், கொஞ்சம் கொத்த மல்லியும் சேர்த்து அரைத்துக் குடித்தால், எப்பேர்பட்ட மலச்சிக்கலும் சரியாகும். கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் நாட்களிலும் கேரட் ஜூஸ் குடிப்பதால், உடலிலுள்ள அதிகப்படியான தண்ணீர் தேக்கம் சரியாகி, உடல் லேசான உணர்வு பெறும். கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் கேரட் ஜூஸ் குடிப்பதால், பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஆபத்துகூட குறையுமாம். குழந்தையின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோர், தினமும் கேரட் ஜூஸ் குடித்தால், அவர்களது இனப்பெருக்கத் திறனானது மேம்படும். புகைப்பிடிப்பவர்களும், புகைப்பிடிப்பவர்களுக்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டியவர்களும் தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், புகையினால் உண்டாகும் ஆபத்திலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.
ஆரோக்கிய ரெசிபி: கேரட் சூப்
என்னென்ன தேவை?
கேரட் - 400 கிராம், பெரிய வெங்காயம் - 1, கொத்தமல்லி - 1 கட்டு, காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் - ஒன்றரை லிட்டர், தனியா தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும். கேரட் வெந்ததும், தனியா தூள் சேர்த்து வதக்கி, காய்கறிகள் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, தீயைக் குறைத்து மேலும் 15 நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும். பிறகு அதை ஆற வைத்து, மத்தால் நன்கு மசித்து, மறுபடி 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
கேரட் - வெந்தயக் கீரை பொரியல்
என்னென்ன தேவை?
கேரட் -2, வெந்தயக் கீரை - 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் சிட்டிகை, தனியா தூள் - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வெந்தயக் கீரை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டியதும், பொடியாக நறுக்கிய கேரட், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். தண்ணீரெல்லாம் ஆவியாகி, கேரட் வெந்ததும் இறக்கவும். சாதம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
கேரட் தி கிரேட்!
கேரட்டிலுள்ள காரத்தன்மை குணமானது, ரத்தத்தை சுத்திகரித்து, ஊட்டமேற்றுகிறது. உடலின் அமில - காரத்தன்மையை சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது. கேரட்டில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ஹைப்பர் டென்ஷனை குறைக்கிறது. கேரட்டில் உள்ள நார் சத்தானது, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்க உதவுவதன் மூலம் இதய நோய்கள் தவிர்க்கப்படுகின்றன. கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளோருக்கு கேரட் சிறந்த உணவு.
பச்சை கேரட்டை மென்று தின்பதன் மூலம் வாயிலுள்ள கிருமிகள் அழிவதுடன், பற்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து, செரிமானத்துக்குத் தேவையான தாதுக்கள், வைட்டமின்களையும் தூண்டுகிறது. வயிற்றுப் புண்களை ஆற்றுகிறது. கேரட்டில் உள்ள கேரட்டினாயிட்ஸ், ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. கேரட்டில் உள்ள falcarinol என்கிற நுண் ஊட்டச் சத்தானது, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. மிகவும் குறைவான ரத்தப் போக்கு உள்ளவர்கள் அடிக்கடி கேரட்டை சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தப் போக்கு முறைப்படுகிறது. சிறு வயதிலிருந்தே கேரட் சாப்பிட்டுப் பழகுகிறவர்களுக்கு பிற்காலத்தில் பார்வைக் குறைபாடுகள் வரும் வாய்ப்புகள் குறைவு. காரணம், கேரட்டிலுள்ள பீட்டா கரோட்டின். கேரட்டில் கலோரியும் உப்புச் சத்தும் குறைவு என்பதால் ஆரோக்கியமான காய்கறிகளில் அதற்கென தனி இடம் உண்டு.
பாரம்பரிய ரெசிபி கேரட் அல்வா
என்னென்ன தேவை?
துருவிய கேரட் - 2 கப், சர்க்கரை - 2 கப், நெய் - 1/4 கப், பொடித்த ஏலக்காய் - சிறிதளவு, முந்திரி, பாதாம் - சிறிதளவு, சர்க்கரை சேர்க்காத கோவா - 1/4 கப், வேக வைக்க பால் - 2 கப்.
எப்படிச் செய்வது?
துருவிய கேரட்டை பாலுடன் சேர்த்துக் கலக்கவும். பின் சர்க்கரை கலந்து ஒரு கனமான பாத்திரத்தில் போட்டுக் கிளறவும். பின் நெய் சேர்க்கவும். சிறிதளவு கோவாவும் சேர்த்துக் கிளறவும். கடைசியில் ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment