Saturday, August 9, 2014

கல்லீரல் அழற்சி தடுக்கும் சைவ உணவு!

கல்லீரல் அழற்சி தடுக்கும் சைவ உணவு!



மனிதன் உயிர் வாழ முக்கிய உறுப்புகளில் கல்லீரல் முக்கியமானது. இக்கல்லீரலை பாதிக்கும் வைரஸ் கிருமிகள் ஹெபடைடிஸ் ஆகும். இதில் ஏ, பி,  சி, டி, இ என பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்னையை ஏற்படுத்தினாலும், அனைத்துமே கல்லீரலை பாதிக்கும் வைரஸ்  கிருமிகள் ஆகும். பொதுவாக கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகும். கல்லீரல் அழற்சியை கடுமையான வகை,  நீடித்த கடுமையான வகை என்று இரண்டாக பிரிக்கலாம்.


கடுமையான வகை

கல்லீரல் அழற்சி என்பது கல்லீரல் உறுப்பு மாற்றம் செய்ய வேண்டிய நிலைகூட வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டால் மஞ்சள் காமாலை நோய்  ஏற்படும். மேலும் காய்ச்சல், உடல் சோர்வு, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, பசியின்மை, புகை பிடிக்க  வெறுப்பு, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, தோல் மஞ்சள் நிறமடைதல், வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகள்.

நீடித்த கடுமையான வகை


நீடித்த கடுமையான வகையில் பலருக்கும் ஹெபடைடிஸ் இருப்பது தெரியாது. கல்லீரல் சேதமடைந்துள்ளதை பொறுத்து, இந்த வகை நோயின்  தீவிரம் தெரியும். மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகளுடன் வயிறு உப்பி இருப்பது, எடை குறைதல், ரத்தக்கசிவு, முகப்பரு, அளவுக்கு அதிகமாக  மாதவிடாய் நீள்வது, சிறுநீரக அழற்சி, வீக்கம் ஆகியவை இந்த வகைக்கான அறிகுறிகள். பொதுவான அறிகுறியாக ஜீரணப் பிரச்னையும் ஏற்படும்.

காரணம் என்ன?


கல்லீரல் அழற்சி நோய் தொற்றுகள், நச்சுப் பொருட்கள், குறிப்பாக குடிப்பழக்கம், கல்லீரல் புற்றுநோய் காரணமாக கல்லீரலில் ஹெபடைடிஸ் வைரஸ்  கிருமிகள் தொற்றிவிடுதல் போன்றவைகளினால் ஏற்படுகின்றன. இவற்றில் ‘சிரோசிஸ்‘ எனும் நோய்தான், கல்லீரல் நோய்களின் கடைசி நிலை.  இதற்கு மிகவும் முக்கியக் காரணம் மது அருந்துவது.

தடுப்பு முறைகள்

சீரான உணவு முறை, உடற்பயிற்சி, சரியான ஓய்வு ஆகியவையே கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கு மட்டுமல்லாமல், ஆரோக்கிய வாழ்வுக்கும்  அடிப்படையாக இருக்கும். ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி வராமல் தடுக்கத் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகாமல்  தடுக்கலாம். மது அருந்துவது கல்லீரலை கடுமையாக பாதிக்கும் என்பதால் குடிப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும். கல்லீரலை பாதிக்காத  மருந்து, மாத்திரைகளை மட்டுமே பொதுவாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த மருந்தையும், மருத்துவரின் அறிவுரையின்றி நீண்ட நாட்களுக்கு  சாப்பிடக்கூடாது. முக்கியமாக கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தம், உறுப்பு, திசுக்கள், விந்து ஆகியவற்றை தானமாக அளிக்கக்கூடாது. மதுபானம்,  போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும்.

கல்லீரல் பலமடைய


கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சைவ உணவே சிறந்தது. திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ் ஆகியவற்றை தினசரி குடிப்பதன் மூலம் சிறுநீர் எளிதாக  வெளியேறும். எலுமிச்சை சாறை தண்ணீருடன் கலந்து குடித்தால் கல்லீரலின் செல்கள் பலமடையும். இது மஞ்சள் காமாலை நோய்க்கு நல்லது. தினசரி சமையலில் பூண்டை சேர்த்துக்கொள்வது நல்லது. சீரகப் பொடி கலந்த மோர் பருகினால் ஜீரணம் மேம்படும். கல்லீரல் கோளாறு  உள்ளவர்களும், கல்லீரல் நோய் வராமல் தடுக்கவும், அதிகளவில் சமையல் எண்ணெயை பயன்படுத்தாமல் குறைந்தளவில் பயன்படுத்த வேண்டும்.

கல்லீரலை வலுவாக்கும் துளசி


கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு தண்ணீர், உணவு எது சாப்பிட்டாலும் உடனே வாந்தி வரும். மாதுளம்பழம், துளசி இலைகளை எடுத்து கழுவி,  அத்துடன் ஏலக்காய் 4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து காய்ச்சி, அரை டம்ளராக வடிகட்டி தேவையானால் சிறிது  பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல், மலேரியா,  நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு. எலுமிச்சம்பழம், தேன், தக்காளி  ரசமும் சம அளவு கலந்து காலை, மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர்கேடுகள் மறைந்து உடல்  தெம்பாக இருக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீர்பெறும். இதயம் பலம் பெறும். கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில் எலுமிச்சம்  பழத்தைப்பிழிந்து குடித்து வர விரைவில் குணமாகும். உணவில் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் நெய், சீரகம்,  பாசிப்பருப்பு சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும். இவற்றை முக்கியமாக பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன்  செயல்படும். குறிப்பாக புகை, மது, இரவில் அதிக நேரம் கண் விழிப்பு, அதிகமாக காபி குடிக்கும் பழக்கமுள்ளவர்கள் இவற்றை உண்பதன் மூலம்  கல்லீரல் அழற்சி ஏற்படாது.

No comments:

Post a Comment