பழங்களின் மருத்துவ குணங்கள்
பழங்களில் ஏராளமான பயன்கள் உள்ளன. பழங்கள் சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படும் நோய்களுக்கும் தீர்வு உள்ளது. அதுபற்றிய விவரம்:கொய்யா பழம்:
கொய்யா பழத்தில் வைட்டமின் ‘சி’ உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் ‘சி’ உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. எனவே கொய்யாபழத்தை சிறுவர்கள் சாப்பிடலாம். மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பயன் கிடைக்கும். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாபழம் சாப்பிட்டு வர நோய் குணமடையும்.
மாம்பழம்:
மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் உடலில் ரத்தம் அதிகமாகி உடலுக்கு பலம் கிடைக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
பப்பாளி:
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. குறைந்த விலையில் கிடைக்கும். வீடுகளிலும் எளிதாக வளர்க்கக்கூடியது. இந்த பழத்திலும் வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்து நிறைய உள்ளது. பல் சம்பந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி பழம் அருமருந்தாக பயன்படுகிறது. நரம்புகள் வலுவடையவும், ஆண்மைத்தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பப்பாளி சாப்பிடலாம். மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் தினமும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.
அன்னாசிபழம்:
அன்னாசி பழத்தில் வைட்டமின் ‘பி’ உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. உடலில் ரத்தத்தை விருத்தி செய்யும். உடலுக்கு பலத்தை தரும். பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக கட்செய்து வெய்யிலில் தூசிபடாமல் உலர்த்தி வற்றல்களாக செய்ய வேண்டும். பின்னர் இதை தினமும் படுக்கைக்கு செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இவ்வாறு செய்தால் பித்தம் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
மாதுளம் பழம்:
இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப் பிட்டு வந்தால் குணமாகும். பித்த சம்பந்தமான அனைத்து உடல்நல குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வாழைப்பழம்:
மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிட்டு வந்தால் இந்நோய்களில் இருந்து விடுபடலாம். தினமும் இரவு உணவிற்குப்பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத பெண்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும்.
ஆரஞ்சு:
ஆரஞ்சில் வைட்டமின் ஏ, பி2 அதிகமாக உள்ளது. இதில் சுண்ணாம்புசத்தும் மிகுந்து காணப்படுகிறது. இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல் ஈறுகளில் ரத்தக் கசிவு இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்கினால் பலன் கிடைக்கும்.
திராட்சை
எல்லா வகையான திராட்சையிலும் வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலை யில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சை சாறு அரை டம்ளர் எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து குடித்து வரலாம்.
பேரீச்சை
தினமும் இரவில் படுக்க செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். மேலும் புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்பந்தமான கோளாறுகளும், நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் நீங்கும்.
எலுமிச்சை
கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்துச் சாற்றை உறிஞ்சினால் போதும். நெஞ்சில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுபவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து காலை, மாலை தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணமாகும். தலைவலி இருப்பவர்கள் சூடான 1 கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது. எலுமிச்சை பழத்தை இரண்டாக பிளந்து ஒரு பாதியை தேள் கொட்டிய இடத்தில் நன்றாகத் தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம் பழத்தை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலச்சிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவுகள் வராது.
No comments:
Post a Comment