Sunday, September 15, 2013

ஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்


ஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ! ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு புறத்திலும் சிறு கொழுப்புக் கோளங்கள் இருக்கின்றன. இந்தக் கோளங்களிலிருந்து பிசுபிசுப்புள்ள திரவக்கசிவு மயிர்க்கால்களின் வழியாக தோலின் மேல் பகுதி வரை வந்து தோல் வறண்டு போகாமல் வழவழப்புடன் இருக்க உதவுகிறது. புளிப்பான இந்தத் திரவக் கசிவு, தோல் பாதுகாப்புக்கான பயனைத் தந்த பிறகு, மீதியுள்ளது அழுக்காகிறது. இந்த அழுக்கைப் போக்க அந்த காலத்தில் பச்சைப் பயறு, அரிசி, கடலை போன்றவற்றை மாவு செய்து சாதம் வடித்த கஞ்சியில் குழைத்து முகத்தில் தேய்த்து சுத்தம் செய்து கொள்வார்கள். அந்த இடத்தைத் தற்போது ஆஃப்டர் ஷேவிங் லோஷன் பிடித்துள்ளது. மேற்குறிப்பிட்ட மாவு வகைகள், தோலில் அழற்சி ஏற்படுத்தாமல் அழுக்கை மட்டும் அகற்றி தோலின் மென்மையைப் பாதுகாத்தன. ஆனால் பட்டதுமே சுரீர் என்ற எரிச்சலைத் தரும் ஆஃப்டர் ஷேவிங் லோஷன் இந்தக் கொழுப்புக் கோளங்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்னவென்பது சிந்தனைக்குரிய விஷயமாகும். சிலர் முகத்தை ஷேவிங் செய்த பிறகு சோப்பு போட்டு கழுவுவார்கள். இது மிகவும் கெடுதலாகும். முகத்தில் அதிக வறட்சியை சோப்பு ஏற்படுத்தும். ஷேவிங் செய்த பிறகு தோலின் அடியில் உள்ள ரோமத்திலிருந்து புதிய பகுதி வளர்ந்தும் அப்பகுதி வெளியே தள்ளப் படுகிறது. இந்த ரோமம் மிருதுவாக ஆவதற்கு மென்மையான ‘மாய்ஸ்சரைஸிங் க்ரீம்‘ அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி, தசைப் பகுதிகளை இதமாகப் பிடித்து ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஊற வைக்கலாம். இதன் மூலம் ரோமத்தின் அடியிலுள்ள கோளங்கள், நெய்ப்பைத் தரும் கசிவை உற்பத்தி செய்து அடுத்த நாள் ஷேவ் செய்வதற்குத் தோலைப் பதப்படுத்துகிறது. தினமும் ஷேவிங் செய்துகொள்ளும் பழக்கமுள்ளவர்கள் முதல்நாள் இரவு இதுபோலச் செய்து மறுநாள் காலை எளிதாக ஷேவிங் செய்துகொள்ள முடியும்.ஷேவிங் செய்தவுடன் டர்க்கி டவல் எனப்படும் மிருதுவான துண்டால் தண்ணீரில் நனைத்துப் பிழியாமல் முகத்தை இதமாகத் துடைத்து விடுவதால் முகத்தின் மயிர்க்கால் பகுதி விரிந்து கோளங்கள் சுறுசுறுப்பு அடைகின்றன. முகப்பொலிவு, மிருதுத் தன்மை, தோல் உறுதி ஆகியவற்றை ஏற்படுத்தும்.முகத்தின் வசீகரம், தோல் மென்மை, நிறம் ஆகியவற்றை விரும்பும் ஆண்கள், நன்னாரி வேர், விலாமிச்சம் வேர், வெட்டி வேர், ரோஜா மொட்டு, மரிக்கொழுந்து, வெள்ளை சந்தனம், வெந்தயம், மகிழம்பூ, கார்போக அரிசி, பச்சிலை இவை வகைக்கு 5 கிராம், உலர்ந்த எலுமிச்சம் பழத்தோல் 50 கிராம் சேர்த்து மிஷினில் அரைத்து நீர் விட்டுக் குழைத்து, குளிக்கும்போது முகத்தில் பூசி சிறிது நேரம் வைத்திருந்து கழுவுவது நல்லது

No comments:

Post a Comment