நீங்கள் இது வரை தூங்கியிருக்கிறீர்களா?
யோகாசனங்கள் உடலுக்கும் மனதுக்கும் வலிவையும், ஆற்றலையும் தருகின்றன.
ஆனால் அதே வேளையில் தியானம் என்பது மனதை தொடர்ந்து செம்மைப்படுத்த உதவுகிறது. இந்த தொடரில் யோகசன பயிற்சிகளுக்கிடையில் தொடர்ந்து அவ்வப்போது தியானத்தை வலியுறுத்தி வருவதும் இதன் காரணமாகத் தான். தியானத்தின் மூலம் நமது புலன்களின் வலிமை அதிகப்படுத்தப்படுகிறது. உடல் பதட்டமில்லாத ஓய்வு நிலைக்கு செல்கிறது. அதாவது ஒரு ரேடியோ அல்லது தொலைக்காட்சி தெளிவற்ற நிலையில் அதை பைன் டியூன் செய்வது போல் நமது விலகி ஓடி எத்தனையே குழப்பத்தை சிந்தித்துக் கொண்டிருக்கும் மனதை பைன் டியூன் செய்வதே தியானம்.
மனதை வென்றவர்களிடம் இருந்தே மகத்தான் விடயங்கள் இந்த உலகத்திற்காக வெளிப்பட்டிருக்கின்றன. அதாவது, இந்த உலகின் செயற்கரிய சாதனைகள் என்று சொல்லப்படுபவை அனைத்துமே மனதை ஒருங்கிணைத்தன் மூலமே சாதிக்கப்பட்டிருக்கின்றன. மனதை ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பதுவே தியானம். அதாவது, அலைபாயும் மனதை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயலவே தியானம் செய்கிறோம். மற்றவர்களிடம் இல்லாத அக,புற வேறுபாடுகளை தியானம் செய்பவர்களிடம் காண முடிவது கண்கூடு.
தியானப்பயிற்சியில் ஈடுபடுபவர்களின் கண்களில் ஒரு வித பிரகாசமும், முகத்தில் ஒரு இயல்பான அமைதியும் எப்போதும் இருக்கும். பிரச்சினைகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அலசி முடிவெடுக்க மாட்டார்கள். மனிதனை அழிக்கும் முக்கிய இயல்பான கோபம் இவர்களிடம் காணப்படுவதில்லை. தெளிவான, அமைதியான, நிதானமான சொற்கள் இவர்களிடம் வெளிப்படுவதை காணமுடியும். இப்படி தியானத்தால் பல பல அனுகூலங்கள் இருக்கின்றன.
தினமும் காலையிலும், இரவிலும் 30 நிமிடம் அளவுக்கு தியானம் செய்தால் கூட மனதிலும், உடலிலும், நமது நடவடிக்கையிலும் சிறந்த முன்னேற்றமான பலன்களை காண முடியும். தியானத்தை தொடங்கும் முன்பாக ஜெபத்தை சொல்வதை கடைப்பிடிக்கலாம். பிறகு தியானம் தானாக வந்து விடும். தியானம் என்பது மனத்துள் இறங்கி, மூழ்கி, ஆழ்ந்த நிலையையும் கடந்து நமது முழு உணர்வை அறிந்து கொள்ள உதவுகிறது. இது காலத்தின் சூழல்களால் அலைக்கழிக்கப்படும் நம்மை அவற்றின் அலைக்கழிப்பிலிருந்து தற்காத்துக் கொண்டு அற்புதமான மனிதர்களாக மாற்ற உதவுகிறது. பிறந்தது முதல் நாம் பார்க்கும், நாம் கேட்கும், உணரும் ஒவ்வொன்றையும் நமது இயல்புக்கு ஏற்றபடி மட்டுமே இந்த உலகில் இருக்கும் கோடானு கோடி மனிதர்களும் சிந்திக்கிறார்கள். அதற்கு மேல் உள்ளிறங்கி எதையும் சிந்திப்பதில்லை.
அன்றாடம் சிறிது தியானத்தில் அமர்ந்து மனதை நோக்கி சிந்திக்க தொடங்கும் போது மட்டுமே மனதின் விகாரங்களை, மனதின் ஓட்டத்தை, அலைபாயும் அவசரத்தை உணர முடியும். அப்போது தான் அது எவ்வளவு கொடுமையான கோலத்தை நம்மில் ஏற்படுத்தி வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் முடியும். ஒவ்வொன்றுக்கும் மனதை அதன் பாதையில் விடாமல் அதன் கடிவாளத்தை நமது கட்டளைக்கு கொண்டு வருவதே தியானம். அதாவது, தியானம் என்பது எண்ணமில்லாத மனநிலையை அடைய, உலகைப் பற்றிய எண்ணங்களை ஒழிக்க, உலகைக் கடந்த ஓர் எண்ணத்தை உண்டாக்கி கொள்வதற்கே. பிறந்தது முதல் நாம் காணும், உணரும் அனைத்தும் ஒரு கணிணியின் நினைவகத்திற்குள் பதிந்து கிடப்பது போல் மனதின் அடியில் பதிந்து கிடந்து நமது எண்ணங்களை குழப்புகின்றன. தேவையில்லாத ஜங்க் பைல்களை அழிப்பது போல் மனதில் அடி ஆழத்தில் தேங்கும் குப்பைகளை அழிப்பதுவே தியானத்தின் சிறப்பு. தியானத்தை தொடங்கும் முன்பாக மனதின் தன்மைகளை பற்றி சிறிது தெரிந்து கொள்வது நல்லது. மனதிற்கு பல நிலைகள் இருப்பதை யோகிகள் சொல்லி வந்திருக்கிறார்கள். அது எப்போதும் விழிப்பு நிலை, கனவு நிலை அல்லது தூக்க நிலை என்ற மூன்று நிலைகளில் ஒன்றில் இருக்கிறது. ஆனால் இதையும் தாண்டி துரீயம் என்ற நிலையில் இருப்பதாகவும் யோகிகள் கருதுகின்றனர். இவற்றை பற்றி சிறிது பார்க்கலாம்.
விழிப்பு நிலை
பிறந்த நிலையில் இருந்து நாம் காணும் அனைத்து செயல்பாடுகளையும் கண்டு மயங்கி அதே நினைவில் இருப்பது தான் விழிப்பு நிலை. ஒரு விடயம் இப்படி நடந்திருந்தால்,இப்படி ஆகி இருந்தால்,இப்படி சொல்லியிருந்தால் என்று நடக்காத ஒன்றை மனது மீண்டும் மீண்டும் நினைத்து குழப்பிக் கொண்டிருக்கும். ஒரு நிகழ்ச்சியுடன் வேறு பழைய கணக்குகளை ஒப்பிட்டு பார்க்கும். அதாவது நடந்து முடிந்த போன ஒன்றை தேவையில்லாமல் போட்டு குழப்பிக் கொண்டிருக்கும். மனதின் விழிப்பு நிலையில் இது நடப்பது இயல்பு. இந்த நிலையில் கனவு, தூக்கம் என்ற நிலைகள் இல்லை.
கனவு நிலை
மனதின் கனவு நிலை என்பது, அன்றாடம் நமது செயல்களின் சுக துக்கங்கள் சார்ந்த அனுபவங்களின் தொகுப்புகளை மனது ஓய்வு நிலையில் அசை போட்டு பார்ப்பது. இது மனதிற்குள்ளேயே நடைபெறும் ஒரு வாழ்க்கை. இது நுட்பமான உலகில் நிகழ்வது. விழிப்பு நிலையில் நாம் காணும் செயல்கள் தான் கனவு நிலையில் தோன்றுகின்றன. ஆனால் விழிப்பு நிலையில் சாதிக்க இயலாதவற்றை கனவு நிலை சில நேரங்களில் சாதித்து காட்டுவதாக ஒரு மாய தோற்றத்தை காட்டுகிறது. அதாவது விழிப்பு நிலையில் பறக்க முடியாத நாம் கனவு நிலையில் பறக்கிறோம். அவதார் பட கதாநாயகனை போல் மாறி புனித மரத்தின் கிளைகளில் அமர்ந்து ஓய்வெடுக்கிறோம். இது போல் பயம், மகிழ்ச்சி, பகை, நட்பு என்று பல உணர்வுகளும் கனவுலகிலும் உண்டு.
இந்த கனவு நிலையில் தான் பலர் வித்தியாசமான உணர்வுகளை அடைகின்றனர். அதாவது, கனவு நிலையில் கடவுள் தரிசனம் , தனக்கு தெரியாத வேற்று மொழிகளில் மற்றொரு நபருடன் சரளமாக பேசுவதாக காணுவது போன்ற காட்சிகளை கனவு நிலையில் உணருவதுண்டு. மனமானது உடலுக்கு வெளியே எப்போதாவது சூட்சும உடல் வெளிக்கு பயணிக்கும் போது இப்படி நிகழலாம் என்கிறார்கள். அதாவது தமிழ் மொழி மட்டுமே தெரிந்த ஒரு நபர் மும்பையின் ஒரு இடத்தில் மற்றொரு நபருடன் இந்தி மொழியில் சரளமாக உரையாடுவதாக காட்சிகள் தெரியும்.
இந்த கனவு நிலையை பொறுத்த மட்டில் சிலருக்கு விழிப்பு நிலை வந்தவுடன் தனக்கு ஏற்பட்ட கனவின் நினைவே வருவதில்லை. சிலரோ தனக்கு இப்படி ஏற்பட்டதாக அரைகுறையாக சொல்வார்கள்.
யோக வசிஷ்டக் கதை என்று ஒன்று உண்டு. அதாவது, ஒரு அரசன் தனது கனவில் தான் பிச்சைக்காரனைப் போல் திரிந்து கொண்டிருப்பதாகவும், தன்னைப் போலவே தெருவில் திரியும் பிச்சைக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கண்டான். அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில் நஞ்சு கலந்த உணவால் ஏழு பிள்ளைகளும் மரணத்தை எட்டினர். அரசன் விழித்துக் கொண்டான். தான் அரசன் என்றும், செல்வச் செழிப்பான சூழலில் தான் இப்போதும் வாழும் அரசன் என்பதை உணர்ந்தான். அப்போது ஒரு பணியாளன் அங்கு வந்து, நோயில் விழுந்திருந்த அரசனின் பிள்ளை ஒருவன் இறந்து விட்டதாக கூறினான். அரசி பதறினாள். ஆனால் அரசன் சிரித்தான். அவன் அரசியிடம்' கனவில் இறந்த ஏழு பிள்ளைகளுக்காக அழுவதா? விழிப்பில் இப்போது இறந்து போன என் ஒரு பிள்ளைக்காக அழுவதா?' என்றானாம். சில நேரங்களில் கனவே உண்மை போன்று நிகழ்ந்து பலரை அதற்கேற்ற செயல்களை செய்ய வைத்து விடுவதும் உண்டு.
தூக்க நிலை
மனிதனின் ஆழ்ந்த தூக்க நிலையில் தான் ஒருவன் தான் என்பதை மறந்து போகிறான். தான் ஆணா, பெண்ணா, என்ன நிறம் எங்கிருக்கிறோம் என்பதெல்லாம் மறந்து போகிறது. பிறந்த குழந்தைகளும், தாவரங்களும் இந்த நிலையில் தான் எப்போதும் இருக்கின்றன. மூளையானது 'தூங்கிக் கொண்டிருக்கிறோம்' என்பதை மட்டும் பதிவு செய்கிறது. இந்த நிலையில் தான் மனம் செயல்படாமல் ஓய்வாக இருக்கிறது என்று சொல்லலாம். மனம் இயங்காத காரணத்தால், புலன்களும் புற உலகில் சஞ்சரிக்க முடிவதில்லை. அதாவது தூக்க நிலை என்பது கனவுகள் இல்லாத நிலையை குறிக்கிறது. கனவுகள் இல்லாத தூக்கத்தில் ஆழ்ந்து எழும் போது மட்டுமே உடலுக்கும், மனதுக்கும் ஒரு புத்துணர்வு கிடைத்தது போல் இருப்பதுண்டு.
நல்ல ஆரோக்கியமுள்ள உடலும், மனமும் கொண்ட மனிதர்களுக்கு மட்டுமே கனவுகள் இல்லாத இத்தகைய தூக்கம் ஏற்படுவதாக யோகிகளும், இன்றைய மருத்துவ உலகமும் சொல்கிறது. நீங்கள் எத்தனை இரவுகள் தூங்கியிருக்கிறீர்கள் இது போல்.............?
இந்த மூன்று நிலைகளை தவிர யோகிகள் சொல்லும் 'துரீயம்' என்ற மனதின் மற்றொரு நிலையை அடுத்த தொடரில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment