மீன் வாங்கப்போறீங்களா?...
ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதைவிடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்... அது உண்மையும்கூட...
மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்...
மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 1கிலோ உடல் எடைக்கு நாளொன்றுக்கு 1கிராம் புரதம் என்ற அளவிலும், வளரும் குழந்தைக்கு 1.4கிராம் என்ற அளவிலும் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு கூடுதலாக 15கிராம் புரதமும், பாலூட்டும் தாய்மார்களுக்குக்கூடுதலாக 18முதல் 25கிராம் புரதமும் உணவில் சேர்க்கப்படவேண்டும். லைசின் மற்றும் மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்களும் மீன்களில் அதிக அளவில் இருக்கிறது. மீன்களில் காணப்படும் கொழுப்புச்சத்து அளவின் அடிப்படையில் 5 சதவீதத்துக்கும் குறைவான கொழுப்புச்சத்து கொண்ட மீன்களை கொழுப்பு குறைந்த மீன்கள் என்றும் அதற்கும் அதிகமான கொழுப்புடைய மீன்களை கொழுப்பு மீன்கள் என்றும் வகைப்படுத்துவர்.
நெத்திலி, வாவல்(வவ்வால்), விளமீன் போன்றவை கொழுப்பு குறைந்த மீன்களாகும். சீலா, அயிலை மற்றும் நெய் சாளை போன்றவை கொழுப்பு மீன்களில் முக்கியமானவைகளாகும். மீனில் உள்ள கொழுப்பு எளிதில் செரிமாணம் ஆகக்கூடியதே. இவற்றுள் நிறைவேறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் போன்று இவ்வமிலங்கள் இரத்தக்குழாய்களில் படிவதில்லை. எனவே மாரடைப்பு போன்ற நோய்வாய்ப்பட்டவர்கூட உண்பதற்கு ஏற்ற மாமிச உணவே மீன் என்பது குறிப்பிடத்தக்கது.
மீன்களின் மருத்துவப்பண்புகள் சில...
1. மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.
2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.
3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.
4. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
5. மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.
6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.
7. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
8. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.
9. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.
இப்படி மீன்களில் அடங்கியுள்ள மருத்துவப்பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்குமளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது.
சரி... இப்படிப்பட்ட மீனை வாங்கும்போது அது நல்ல மீனா?... இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது?...
மீன்களை வாங்கும்போது அது நல்ல மீனா இல்லை தரம் குறைந்த மீனா என்று கண்டறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளது.
ஒன்று- டோரிமீட்டர் எனப்படும் அதற்கான எலெக்ட்ரானிக் கருவியைக்கொண்டு மீன்களின் தரத்தை சோதிக்கலாம்...
இரண்டாவது – நமக்குத்தெரிந்த சாமான்ய வழிகளில் சோதிக்கலாம்...
அவை என்னென்ன?...
மீன்களின் நிறம், மணம், கண், செவுள், பதம் ஆகியவற்றை சோதிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை கண்டறியலாம்...
தரமான மீன்கள் என்றால்...
1) மீன்களின் உடல் தோற்றம் கண்ணாடி போன்ற பளபளப்புடன் காணப்படும்.
2) தரமான மீன்களில் கடல் பாசி மணம் இருக்கும்.
3) கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும்.
4) செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும்.
5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது.
6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும்.
7) தசைப்பகுதி உறுதியாக இருக்கும்.
தரம் குறைந்த மீன்கள் என்றால்..
1) மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும்.
2) விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும்.
3) மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும்.
4) செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும்.
6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும்.
7) தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும்.
என்ன மக்களே... மீனின் மகிமைகளைத்தெரிந்து கொண்டதோடு, தரமான மீன்களை வாங்குவது எப்படி என்றும் தெரிந்து கொண்டீர்களா?...
அப்புறமென்ன?... இனி முடிந்தவரையிலும் இறைச்சிக்கடைகளின் பக்கம் திரும்பாமல் உங்களது பார்வையை மீன் மார்க்கெட் பக்கம் திருப்பி ஆரோக்கியமான உணவை உண்ணத்தொடங்குங்கள்... மற்றபடி என்ன மீன் வாங்கலாம் என்றெல்லாம் குழம்பாமல் ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணமிருப்பதால் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வாங்கி கம கமவென சமைத்து சாப்பிடுங்கள்...
No comments:
Post a Comment