Sunday, September 15, 2013

பேஸ் வாஷ்… ஹேண்ட் வாஷ்… ப்ளோர் கிளீனர்… : பயன்படுத்துபவரா நீங்கள்? மிஞ்சினால் ஆபத்து தான்! எச்சரிக்கை


பேஸ் வாஷ்… ஹேண்ட் வாஷ்… ப்ளோர் கிளீனர்… : பயன்படுத்துபவரா நீங்கள்? மிஞ்சினால் ஆபத்து தான்! எச்சரிக்கை பெரிய பெரிய மால்கள் வந்து விட்டன. இந்த பல்பொருள் அங்காடிகளில், காய்கறி முதல் கம்ப்யூட்டர் வரை விற்கப்படுகின்றன. அதிலும், உணவுப்பொருட்களாகட்டும், சோப்பு சமாச்சாரங்களாகட்டும் எல்லாமே கவர்ச்சிகர பாட்டில்கள், பாக்கெட்களில் கண்களை கவர்கின்றன. அதுபோல, தரையை சுத்தம் செய்ய ஏகப்பட்ட “ப்ளோர் கிளீனர்’கள் வந்து விட்டன. அது மட்டுமில்லை, உடலை “கமகம’ என்று வைத்துக் கொள்ள “டியோடரன்ட்’களும் வந்து விட்டன. இப்படி கவர்ச்சிகர பிளாஸ்டிக் பாட்டில்களில் ஏகப்பட்ட பிராண்ட்களில் இது போன்ற “டிடெர்ஜென்ட்’கள் குவிந்துள்ளன. அவற்றில் என்ன ரசாயனம் கலக்கப்படுகிறது, அது உடலுக்கு நல்லதா, தோலுக்கு பாதுகாப்பானதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. இப்போது பல வகை “டிடெர்ஜென்ட்’கள் வந்தாலும், எல்லாமே நல்லவை தான்; சில முக்கிய பிராண்ட்களில் விற்பனையாகும் அவை தரமானவை தான். ஆனால், தரமற்ற பல கவர்ச்சிகர பிராண்ட்களும் வலம் வருகின்றன. தரமான பொருட்களை வாங்கினால், அவற்றை மிதமாக பயன்படுத்த வேண்டும். தரமற்ற பொருட்களை, விலை மலிவானவற்றை வாங்கவே கூடாது. சில ஆண்டு முன்வரை, மருத்துவமனைகளில் மட்டும் இது போன்ற பல வகை “டிடெர்ஜென்ட்’கள் பயன்படுத்தப் பட்டு வந்தன. மருத்துவமனைக்கு தான் இந்த பொருட்களை நிறுவனங்கள் விற்றும் வந்தன. ஆனால், தனியார் நிறுவன வர்த்தகம், எதையும் விற்று காசாக்கலாம் என்று இறங்கியதன் விளைவு இன்று, ஒவ்வொருவரும் நடமாடும் மருத்துவமனை போல ஆகி விட்டனர். “டிடெர்ஜென்ட்’களில் பெரும்பாலும் “ஆன்டி பாக்டீரியல் கெமிக்கல்’ சேர்க்கப்பட்டுள்ளது. பாக்டீரியா கிருமிகளை கொல்லும் ரசாயனங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. அளவுக்கு அதிகமாக இருந்தாலோ, அடிக்கடி பயன்படுத்தினாலோ ஆபத்து தான். அடிக்கடி கையை சுத்தம் செய்வது நல்லது தான். அதுவே டாக்டர்கள் சொல்லும் போது, “சந்தேகத்தின் பேரில் அடிக்கடி கையை அலம்புவதும் கெடுதல் தான். தோல், தசைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி விடும்’ என்று எச்சரிக்கின்றனர். அதுபோலத்தான், “டிடெர்ஜென்ட்’களும். அடிக் கடி மற்றும் அதிகமாக பயன்படுத்துவதோ ஆபத்தானது. குறிப்பாக, தோல் தான் முதலில் பாதிக்கப்படும். தரமான கம்பெனிகள் தயாரித்த “பேஸ் வாஷ்’கள் விற்பனை செய்யப்படுகின்றன; அது போல, விலை மலிவு “பேஸ் வாஷ்’களும் சந்தையில் மலிவாக குவிந்துள்ளன. இவற்றை பயன்படுத்தும் இளைய தலைமுறையினர் காசுக்கு ஏற்ப வாங்கிக்கொள்கின்றனர். தரத்தை பார்க்காமல், விலையை பார்த்து வாங்குவதால், சருமத்துக்கு தான் பாதிப்பு அதிகம். போகப்போக சொறி, சிரங்கு பாதிப்புகள் வரும். “ஹேண்ட் வாஷ்’ என்பது, கையில் உள்ள பாக்டீரியா கிருமிகளை கொல்வதற்காக, கையை சுத்தமாக வைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள டாக்டர், நர்ஸ்கள் தான், ஆபரேஷனுக்கு முன் இதை பயன்படுத்துவர். அவர்கள் தேவைக்கு மட்டும் தான் பயன் படுத்தி வந்தனர். ஆனால், இப்போது வீட்டுக்கு வீடு இந்த பாட்டில் தான் காணப் படுகின்றன. வாஷ் பேசினில் கையை அலம்பும் போது, இந்த ரசாயன கலவையை கையில் தேய்த்து, தண்ணீரில் சுத்தம் செய்வது வாடிக்கையாகி விட்டது. கைகளை மட்டுமின்றி, முகத்தையும் சிலர் இதனால் சுத்தம் செய்கின்றனர். இது மிக மிக ஆபத்து. குறிப்பாக பெண்களுக்கு முகத்தின் எண்ணெய்ப்பசை போய், சொறசொற…என்றாகி விடும். இந்த வகை “டிடெர்ஜென்ட்’களை அடிக்கடி , அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், கெட்ட பாக்டீரியா மட்டுமல்ல, நல்ல பாக்டீரியாக்களும் நம் உடலில் இருந்து நீங்கி விடும் ஆபத்தும் உண்டு. அப்படி நீங்கி விடும் போது, கெட்ட பாக்டீரியா எளிதில் நுழைந்து விடுகிறது. தொற்றுநோய் முதல் பெரிய நோய்கள் வரை வர இது காரணமாகி விடுகிறது. நிமோனியா, காலரா போன்ற வியாதிகள் எளிதில் வரும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைய இந்த வகை “டிடெர்ஜென்ட்’களும் காரணம். இந்த வகை டிடெர்ஜென்ட்களை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், மிதமாக பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். குளிக்காமல் இருப்பது தெரியாமல் இருக்க, பெர்ப்யூம்களை உடலில் தெளித்துக் கொள்வதால், பல வியாதிகள் வரும். கவர்ச்சிகரமான பாக்கெட்டை பார்த்தவுடன் இளம் வயதினர் வாங்கி விடுகின்றனர். அதை வாங்கிப் பயன்படுத்திய பின் பாதிப்பு வந்தால், டாக்டர் ஆலோசனைப்படி, பழையபடி சாதா சோப்புக்கு வந்து விடுகின்றனர். நீங்கள் அந்த நிலைக்கு போக வேண்டாமே…! இப்போதே புரிந்து கொண்டு பயன்படுத்துங்களேன்!

No comments:

Post a Comment