Wednesday, September 11, 2013

உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு:-


உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு:- மருத்துவத்தின் மிகப்பெரிய சாதனையான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மனிதனுக்கு மருத்துவம் கொடுத்த வரப்பிரசாதமாகும். ஆனால், இந்த சிகிச்சை முறை உரிய முறையில் பயனளிக்க வேண்டும் என்றால் அதற்கு நிச்சயம் மனிதனின் மனநிலை மாற்றமும் உதவ வேண்டும். தற்போது வரை இந்தியாவில் 20,000 பேர் மாற்று கல்லீரல் கோரி பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை வெறும் 500 பேருக்கு மட்டுமே கல்லீரல் கிடைத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் மாற்று உடல் உறுப்புகளுக்கு தட்டுப்பாடு என்று சொல்வது எவ்வளவு கேலிக்குறியதாக உள்ளது. மேலை நாடுகளில் ஏற்பட்ட அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படாததும், சில மத ரீதியான பழக்க வழக்கங்களும், உடல் உறுப்பு தானங்கள் வளர்ச்சி பெறாததற்குக் காரணமாகும். விபத்துக்களில் மூளைச் சாவு அடையும் நபர்களின் உறவினர்களில் ஒரு சிலரே உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வருகின்றனர். மூளைச் சாவடைந்த ஒருவரது உடலில் இருந்து இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா), எலும்பு, எலும்பின் மஞ்ஞை, ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள் என மொத்தம் 25 வகையான உறுப்புக்களை தானமாக அளிக்க முடியும், ஒருவர் தன் உடலை தானமாக தருவதால் சுமார் 10 பேர் உயிர் பெற வாய்ப்புள்ளது. இதில், கண், எலும்புகள், திசுக்கள் ஆகியவை மரணத்திற்குப் பிறகும் தானமாகத் தரலாம். இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை மூளை செயல் இழந்து உயிர் இருக்கும் நோயாளிகளிடம் இருந்து மட்டுமே பெற்று பயன்படுத்த முடியும். எனவே, இளைஞர்களும், சமூக அமைப்புகளும், உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தாமும் உடல் உறுப்பை தானம் செய்ய பதிவு செய்வது பலரது உயிரைக் காப்பாற்றும் செயலாகும்.

No comments:

Post a Comment