Wednesday, September 11, 2013

மூலிகையின் பெயர் -: அழிஞ்சில்.


அழிஞ்சில்: 1. 2. தாவரப்பெயர் -: ALANGIUM LAMARCKII, 3. தாவரக்குடும்பம் -: ALANGIACEAE. 4. இன வேறுபாடு -: கறுப்பு, வெள்ளை, சிவப்புப் பூக்களையுடையவை வேறுபடும். 5. பயன் தரும் பாகங்கள் -: வேர்ப்பட்டை, இலை, மற்றும் விதை முதலியன. 6. வளரியல்பு -: அழிஞ்சில் எல்லா நிலங்களிலும் வளர்க் கூடிய சிறு மரம். ( 15-20 அடி உயரம் )நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. தமிழகமெங்கும் புதர் காடுகளிலும் வேலிகளிலும், தானே வளர்கிறது. இதில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை முதலிய பூக்களையுடைய மரங்கள் உண்டு. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது. இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. 7. மருத்துவப் பயன்கள் -: நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல் காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது. அழஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம். வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து வரக் கடி விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய் ) தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும். அழிஞ்சி இலையை அரைத்து 1 கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும். சிவப்பு அழிஞ்சில் வேர் பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்த பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும். அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல் நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம். அழிஞ்சில் மரமானது வாத கோபம், கப தோஷம், சீழ்வடியும் பெருநோய் இவற்றை நீக்கும். ஆனால் பித்தத்தை உபரி செய்யும். ‘ பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை செல்லாக் சிரந்திரணம் சேர் நோய்க-ளெல்லாமும் அங்கோலங் காணில் அரந்தை செய் நோய்களெல்லாம் பொங்கோல மிட்டோடிப் போம். ’ அங்கோலம் என்று சொல்லப்பட்ட அழிஞ்சி கபத்தினால் ஜீவ ஜந்துக்களின் பற்கடியால் நேர்ந்த எல்லா விஷ தோஷங்களும், பேதி, கிரந்தி, வீரணம் ஆகியவை போகும். அழிஞ்சில்வேர் விழுதி வேர் இவற்றைச் சமனெடையாகக் கொண்டு சிறு துண்டாக நறுக்கி 5-6 நாள் நிழலில் உலர்த்தி அடியில் பெரிய மட்கலத்தில் போட்டு வாய் மூடி ஏழு சீலை செய்து முறைப்படி குழித்தைலமிறக்கவும். இத்தைலத்தை வடிகட்டி சீசாவில் வைத்துக் கொண்டு புறை கொண்ட ரணத்தில் செலுத்திக் கட்டுக் கட்டிக் கொண்டு வர விரைவில் ஆறும். அழிஞ்சி வேர்ப்பட்டைப் பொடியில் கசப்பும், குமட்டலும், காரமும் உண்டு. இரத்த அதிகாரம், கிருமி ரோகம், குட்டம், விரணம், தோல்ரோசம், சுரம், விடாச்சுரம், வயிற்று உப்பிசம், வயிற்று நோய், விசக்கடி முதலியன போக்கும். வேர்பட்டை சூரணம் குட்டம், வாதரோகம், மேகவாயு பிடிப்புகளுக்கு நன்று. அழிஞ்சில் வித்து- ‘ நிகருமிடை மெல்லியலே யித்தரையில் அழிஞ்சில் வித்த தனாற் சாறுபல-மென்னவெனில் மறையு மஞ்சனமு மாகும் சன வசியம் அது செய்திடவே நன்று.’ நாளறிந்து காப்பிட்டு எடுத்த அழிஞ்சில் வித்தினால் அஞ்சன மறைப்பு மையும் உலக வசியமும் உண்டாகும். இந்த இனத்தில் சாதாரண அழிஞ்சலுடன் கறுப்பு அழிஞ்சில் என்கிற ஓர் இனமுண்டு. காய் இலை நரம்பு இவற்றில் கறுப்பு நிறமோடியிருக்கும். இதுவே விசேஷமானது. இதன் உபயோகத்தைப் பற்றி அனுபவ சித்தியுள்ள பெரியாரிடமிருந்து கை முறையாக நேரில் கற்றுணர வேண்டியது. இதைப்பற்றித் தெரிந்து கொள்ள அவா இருப்பின் புலிப்பாணி முதலான மஹரிஷிகளால் கூறப்பட்டுள்ள ஜாலகாண்டங்களில் கண்டறியவும். இதன் வித்துத் தைலத்தைச் சர்ம ரோகத்திறுகும் பூச ஆறும். உள்ளுக்குக் கொடுக்க கப வாதத்தையும் குட்டத்தையும் நீக்கும்.

No comments:

Post a Comment