Wednesday, September 18, 2013

சகல தோல் நோய்க்கும் சதுரக்கள்ளி!


சகல தோல் நோய்க்கும் சதுரக்கள்ளி! நமது தோல் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பது மட்டுமின்றி, உடலின் வெப்பநிலையை சமப்படுத்தவும், வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகிறது. ஆனால் இதே போல் பல நுண்கிருமிகளும் உயிர்வாழ இடமளிக்கிறது என்பதும் அதிர்ச்சியான செய்தியாகும். தோலில் எவ்வளவு நுண்கிருமிகள் இருந்தாலும் அது ரத்தத்தில் கலந்துவிட வாய்ப்புண்டு. தோலில் தோன்றும் நுண்கிருமிகளால் உடலில் பல உபாதைகள் உண்டாகிவிடுகின்றன. தோலில் அரிப்பு, வெடிப்பு, தோல் சிவத்தல், செதில் செதிலாக உதிர்தல், நிறமாற்றம், தோலில் உணர்ச்சியின்மை போன்ற பல உபாதைகளுக்கு தோலில் வளரும் கிருமிகளே காரணமாக அமைகிறது. இந்த கிருமிகள் தோலின் அடுக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி, தோலின் எண்ணெய் கோளங்களை அடைத்து, வியர்வை துவாரங்களை சிதைத்து, தோலுக்கு நிறத்தை தரும் மெலனின் மற்றும் ரோமத்திற்கு நிறத்தை தரும் கெரட்டின் நிறமிகளை அழித்து கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணிய ரத்தக்குழாய் மூலமாக ரத்த சுற்றோட்டத்தில் கலக்கின்றன. இந்தக் கிருமிகள் மூச்சுப்பாதை, உணவுப்பாதை என பலவிடங்களில் பல தொல்லைகளை உண்டுபண்ணுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுகுடல்,பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதிகளில் பலவிதமான புழுக்களும் வளரத் தொடங்குகின்றன. தோலில் தோன்றும் நுண்கிருமிகளால் தோல் கடும் பாதிப்படைகிறது. தோல் வறட்சி, சொரி, சிரங்கு, படை, வெண்படை, கரப்பான், விரலிடுக்கில் தோன்றும் குருக்கள், முகப்பரு, உடம்பில் ஆங்காங்கே அவ்வப்போது தோன்றும் தடிப்பு, வெண்குட்டம், தலையில் தோன்றும் பொடுகு, பூச்சிவெட்டு, நகத்தில் தோன்றும் நகச்சுற்று, நகச்சொத்தை, தொடையிடுக்கு, அக்குள், கழுத்துப்பகுதிகளில் கடும் அரிப்பு போன்ற பல தொல்லைகள் உண்டாகின்றன. நோயின் தீவிர நிலையில் கடும் காரத்தன்மையுள்ள மருந்துகளை உபயோகித்தால்தான் நோய் கட்டுப்படும். காரத்தன்மை அதிகம் மிகுந்த, மூலிகை மருந்துச்சத்துக்கள் அதிகம் நிறைந்த அற்புத மூலிகைதான் சதுரக்கள்ளி. கேட்பாரின்றி சாலையோரங்களில் அதிகமாக முளைத்துக் காணப்படும் கள்ளி வகையைச் சார்ந்த இந்தச் செடிகள் சித்த மருத்துவத்தில் ஏராளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. யுபோர்பியா ஆன்டிக்குவாரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த செடிகளின் பால் மற்றும் இலைச்சாறு மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இதன் இலைச்சாற்றில் ப்ரைடலான், 3 ஆல்பா ஆல், 3 பீட்டா ஆல், டேராக்சரால், டேராக்சிரோன், பீட்டா அமீரின், யுபால்யுபோர்பால் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சிரங்குகளை ஆற்றவும், பால்வினை நோய்களில் தோன்றும் புண்களை குணப்படுத்தவும் உதவுகின்றன. சதுரக்கள்ளியை இடித்து, சாறெடுத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பதத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை தோலில் சொறி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வரலாம். மிளகை சதுரக்கள்ளி சாற்றில் ஊறவைத்து, வெயிலில் நன்கு உலர்த்தி, நல்லெண்ணெயில் மூழ்கும்படி பத்து நாட்கள் வைத்திருந்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர பொடுகு, தலை அரிப்பு நீங்கும். சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் மகாமாரீச்சாதி தைலத்தில் சதுரக்கள்ளி இலைச்சாறு சேர்க்கப்படுகிறது. இதனை கிருமித்தொற்று உள்ள இடங்களில் தடவி வரலாம்.

No comments:

Post a Comment