Wednesday, September 18, 2013

மூலத்தை துரத்தும் துவரை வேர்


மூலத்தை துரத்தும் துவரை வேர் நாம் உண்ணும் உணவு உணவுப்பாதையில் சீரணிக்கப்பட்டு திடக்கழிவாக மலவாசலில் வெளியேறாவிட்டால் பல உபாதைகள் தோன்ற ஆரம்பித்துவிடும். இதற்காக மிகவும் பிரயத்தனம் செய்து மலம் கழிக்க முயற்சிக்கும்போது மலவாயிலில் வலி மற்றும் புண்கள் தோன்றலாம். இதே நிலை நீடிக்கும்பொழுது மலப்பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு மலம் கழிக்க சிரமம் உண்டாவதுடன் ஆசனவாயின் வெளிப்புறம் அல்லது உட்புறத்தில் சிறுசிறு கட்டிகளோ அல்லது வீக்கமோ தோன்றி மூலநோயாக மாறிவிடுகிறது. குறைந்தளவே தண்ணீர் அருந்துபவர்கள், அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள், நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்கள், வாயுவை பெருக்கக்கூடிய பதார்த்தங்களை அதிகம் உட்கொள்பவர்கள், கடுமையான மலச்சிக்கல் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் மூலநோய்க்கு ஆட்படுகிறார்கள். பரம்பரையாகவும் மூலநோய் ஏற்படுகிறது. இவர்களுக்கு ஆசனவாய் பகுதியில் கிருமிகள் தங்கி வளருவதால் ஆசனவாயில் அரிப்பு உண்டாகி, சில நேரங்களில் மூலம் முற்றிப்போய் ரத்தமும், சீழும் மலத்துடன் கலந்து வெளியேற ஆரம்பிக்கிறது. பலருக்கு இதன் ஆரம்ப அறிகுறி தெரியாமல், நோய் அதிகரித்த பின்பே பலவித உபாதைகள் தோன்றுகின்றன. மூலநோய் உள்ளவர்கள் வாயுவை பெருக்கக்கூடிய கிழங்கு வகைகள், பயறு வகைகள், கொழுப்பு சத்துள்ள உணவுகள், அசைவம், காரம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பதுடன், நீண்ட நேரம் அமர்ந்திருப்பதையும், அதிக எடை தூக்குவதையும், வாகன பிரயாணம் செய்வதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். எளிதில் செரிக்கக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள், பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். சாதாரண மூலம்தானே என்று அலட்சியம் காட்டினால் அது பவுத்திரமாகவும், ஆசனவாய் அடித்தள்ளலாகவும் மாறிவிடுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் துவரையின் வேரில் ஏராளமான மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. கஜானஸ் கஜன் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த துவரைப் பயிர்கள் உணவுப்பயிராக சாகுபடி செய்யப்படுகின்றன. சாணபுஷ்பிகம் என்ற சமஸ்கிருத பெயர் கொண்ட துவரையின் வேரில் பெனில் அலனின், ஐசோபுளோவின், ஐசோபுளோவோன், ஸ்டீரால், ஆன்த்ரோகுயினோன், டிரைடெர்பினாய்டு மற்றும் கஜானால் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை மெல்லிய சதைப்பகுதிகளில் ஏற்படும் வீக்கம், கொப்பளம், கட்டி போன்றவற்றை கரைத்து அங்கு தேங்கிய ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. துவரை வேரை நிழலில் உலர்த்தி முடிந்தளவு பட்டையை உரித்து, நன்கு பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் அளவு தினமும் இரண்டு வேளை தேன் அல்லது வெண்ணெயுடன் கலந்து சாப்பிட, ஆசனவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் மற்றும் சதை வளர்ச்சி நீங்கும். துவரம் பருப்பிலும் இந்த வேதிச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அன்றாட உணவில் நன்கு வேகவைத்து உட்கொண்டு வந்தால் மலவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் நீங்கும்.துவரை வேரிலிருந்து மருந்து செய்ய இயலாதவர்கள் துவரை வேர் சேர்த்து செய்யப்பட்ட கன்கனியாதிவடி என்னும் ஆயுர்வேத மாத்திரையை காலை-1, இரவு-1 உணவுக்குப் பின்பு சாப்பிட்டுவரலாம். அத்துடன் விளக்கெண்ணெயை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து ஆசனவாயில் தடவலாம்.

No comments:

Post a Comment