Tuesday, October 14, 2014

நான் வரும் பின்னே.. என் தொப்பை வரும் முன்னே..

‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...’ என்கிற பழமொழியை மாற்றி நண்பர்கள் என்னைப்பார்த்து ''நான் வரும் பின்னே.. என் தொப்பை வரும் முன்னே’’ என்று சொல்லி கிண்டல் பண்றாங்க.. தொந்தியை குறைக்க தந்தி வேகத்தில் ஒருவழி சொல்லுங்க.'' நாட்டில் உள்ள அனேகம் குண்டர்களின் ஒட்டுமொத்த வேண்டுக்கோள் இதுவாகத்தான் இருக்கும். அதற்கு மருத்துவர் சொல்லும் ஒரே தீர்வு ‘பப்பாளி சாப்பிடுங்க.’

'அய்யா! எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு 7 வருஷமாச்சு. இன்னும் வயித்தில ஒரு புழு பூச்சியும் தங்கல. குழந்தைப்பேறு கிடைக்க ஒரு வழி சொல்லுங்க' என்று சித்த மருத்துவரிடம் உருகும் தம்பதியருக்கு அந்த மருத்துவர் சொல்லும் ஒரே பதில், ‘பப்பாளி சாப்பிடுங்க.’
'சிறுநீரகத்தில் கல் உண்டாயிருக்கு வலி தாங்க முடியல, அறுவை சிகிச்சை செய்யவும் பயமா இருக்கு. அந்தக் கல்லைக் கரைக்க ஒருவழி சொல்லுங்க'ன்னு கேளுங்க. அதுக்கும் 'பப்பாளி சாப்பிடுங்க'னு பதில் வரும்.
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணிகள் தொடங்கி... அப்பல்லோ டாக்டர்கள் வரை தங்களைத் தேடிவரும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் பழங்களில் அதி முக்கியமானது பப்பாளி என்றால் அது மிகையில்லை.
வீட்டுப் புறக்கடையில் மட்டுமே ‘பவ்சு’ காட்டிய பப்பாளி மரங்கள் இன்று பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டும் வருகிறது. இன்றுகூட கிராமப்புறங்களில் வீட்டு பக்கத்தில் ஒன்றிரண்டு மரங்கள் இருப்பதை பார்க்க முடியும். நகர்ப்புற மக்களும் வீட்டில் பப்பாளி மரங்களை வளர்த்து சாப்பிட முடியும். அது எப்படி என்பதை அழகாய் சொல்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த சிவக்குமார். அவரது வீட்டுத்தோட்டத்தில் காய்கறி செடிகள் காய்த்துக் குலுங்குகின்றன. பப்பாளி மரத்தில் உள்ள பழங்களை பறவைகள் கொத்தி தின்று கொண்டுயிருந்தன. பப்பாளி மரத்தை சுட்டிக்காட்டி பேசத்தொடங்கினார் சிவக்குமார்.
மாடி வீடு உள்ளவர்கள் மொட்டை மாடியிலும், அந்த வசதி இல்லாதர்கள் வீட்டு படிக்கட்டு மூலைகளிலும், பால்கனியிலும், சமையல் அறையிலும், திறந்தவெளி ஜன்னல் ஓரத்திலும் பப்பாளி மரங்களை வளர்க்கலாம். அதற்கு தேவையான பொருட்கள் இரண்டுதான். ஒன்று வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் பிடித்து நிரப்ப பயன்படும் ஒரு பழைய பீப்பாய். இன்னொன்று நிலத்து மண். பழைய பீப்பாயின் மையப்பகுதியை வட்டமாக வெட்டினால் கிடைக்கும், அடிப்பகுதியை பப்பாளி மரம் வளர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதோடு 25 கிலோ மணலை வாங்கிக் கொள்ளவேண்டும். அதில் உள்ள கற்களை பொருக்கி எடுத்துவிட்டு நிலத்து மண், மணல் இரண்டையும் கலந்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைய வேண்டும். மண்ணில் உள்ள கட்டிகள் உடைந்து சந்தனம் போல் மாறும். பிறகு ஈரமண்ணை பரப்பி காய வைக்கவேண்டும். இரண்டு நாளில் மண் ஈரம் காய்ந்து பொலபொல என்று மாறிவிடும். அதோடு உயிர் உரங்களை கலக்க வேண்டும். அருகில் உள்ள வேளாண் அலுவலகம் அல்லது வீட்டுத்தோட்ட அங்காடிகளில் இந்த உரங்கள் கிடைக்கும். இதில் அசோஸ்-பைரில்லம் முக்கியமானது. அதை ஒரு கிலோ அளவில் வாங்கிவந்து, அந்த பொலபொல மண்ணில் கலந்து பீப்பாயினுள் நிரப்பவேண்டும். நிரப்பும் முன்பு மாட்டு சாணம் கிடைத்தால் அதையும் சேர்த்துகொள்ளலாம். தொடர்ந்து பூவாளி கொண்டு பீப்பாய்க்குள் உள்ள மண் நனையும்படி தண்ணீர்விட்டு அது சுண்டியபின், பப்பாளி விதைகளை ஊன்றலாம்.
விதைகளுக்குத் தேவையான பப்பாளிப் பழத்தை கடைகளில் வாங்கிகொள்ளலாம். நன்றாக கனிந்த சிவந்த நீளமான பழங்களில் தான் முளைப்புத்திறன் கொண்ட விதைகள் கிடைக்கும். அந்த பழங்களில் உள்ள விதைகளை எடுத்து அதன் ஈரப்பதம் குறையும்படி காயவைத்து, அந்த விதைகளில் ஒன்றுக்கும் மேற்பட்டதை பீப்பாயில் உள்ள மண்ணில் ஈர விதைப்பு செய்யவேண்டும். ஊன்றும் விதைகளை தகுந்த இடைவெளி விட்டு பரவலாக ஊன்றவேண்டும்.
தொடர்ந்து 35 நாட்கள்வரை பீப்பாய் நிழலில் இருக்க வேண்டும். 35வது நாளில் நாற்றுக்கள் முளைத்து நிற்கும். தொடர்ந்து ஈரம் ததும்ப தண்ணீர் விட்டு பீப்பாயினுள் உள்ள அனைத்து நாற்றுக்கலையும் பிடுங்கிவிட்டு, அதில் ஊக்கமுள்ள நாற்றை மட்டும் எடுத்து பீப்பாய் மன்ணின் மையப்பகுதியில் நடவு செய்து தண்ணீர் ஊற்றி வரவேண்டும். வெளிச்சம் படும்படியான இடத்தில் பீப்பாயை மாற்றி வைக்க வேண்டும். 120 நாள் தொடங்கி மரம் காய், கனிகளை கொடுக்கத் தொடங்கிவிடும். இரண்டு வருடங்களில் உங்கள் குடும்பத்திற்கு தேவையான காய், கனிகளை கொடுக்கும். உங்கள் வீட்டு மருத்துவ செலவும் குறையும்" என்று பயனுள்ள ஆலோசனையை வழங்கினார் சிவக்குமார்.

‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுங்க மற்றவர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கும்......!

No comments:

Post a Comment