கத்தரிக்காய்
மருத்துவக் குணங்கள்: ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்றாகும். கத்தரிப்பிஞ்சும், முற்றிய காய்களும் சமைத்து உண்ண உபயோகப்படுகின்றன. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால்தான் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதனால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. பாரிசவாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகல்கிறது. உடல் வலுவு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது. முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம். கத்தரிவற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். இந்தியாவில் தோன்றியது கத்தரிக்காய். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் முக்கிய காய்கறிப் பதார்த்தமாய் இப்பொழுதும் இருந்து வருகிறது. மத்திய தரைக்கடல் நாடுகளிலும், பால்கன் பகுதிகளிலும் முக்கிய உணவாகக் கத்தரிக்காயைப் போற்றி உண்ணுகின்றனர். அமெரிக்காவின் முக்கியமான முதன்மையான 22 காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்றாய் விளங்குகிறது. உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும். மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் ஊதா அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். அவை இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும். வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்.
No comments:
Post a Comment