Thursday, May 15, 2014

முன்னோர் வழங்கிய மூலிகை: தகரை




மனமது செம்மை யானால் மந்திரஞ் செமிக்க வேண்டா
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாகுமே’’ 


அழகை விரும்பாத மனிதனே கிடையாது என்று கூறலாம். பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தங்களை அழகு படுத்தி கொள்ளும் காலம் இது. கரிய நிறமாகட்டும் சிவந்த நிறமாகட்டும் பார்த்தவுடன் அழகை வெளிப்படுத்துவது தோல் தான். அது பளபளப்பாகவும் நோய் இல்லாமல் இருந்தால்தான் சிறப்பு. தோலில் பாதிப்பு ஏற்பட்டால் வேதனை படாதவர்கள் மிகவும் குறைவு. அத்தகைய தோலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை நீக்கும் மூலிகை தகரை. 

தகரை, கருந்தகரை வெண் தகரை, ஊசித் தகரை என பல்வேறு வகை தகரைகள் உள்ளன. அனைத்தும் ஒரே வகையான பண்புகளை கொண்டிருந்தாலும் கை வைத்தியம் என்ற மருத்துவ முறை தெரிந்தவர்களால் தகரையும் ஊசித்தகரையும் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தகரையானது நீண்ட கூரிய வடிவத்தில் கரும்பச்சை நிறத்தில் எதிரெடுக்கில் அமைந்த இலைகள் கொண்டது. வெருட்டல் மணமும், மஞ்சள் நிற பூக்களையும் உடைய குறுஞ்செடி. இதன் காய் உருண்டை வடிவத்தில் பயிறு போல நீண்டிருக்கும். தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.

பெண்கள் அணியும் பாவாடையை இறுக்கமாக கட்டினால் இடுப்பு பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து படை உண்டாகும். அரிப்புடன் கூடிய இந்த படையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு சிகிச்சை பார்க்காமல் அதிகரிக்க செய்து விடுவார்கள். படர் தாமரை எனப்படும் இந்த நோய், ஆண்களிலும் சிலருக்கு வருவதுண்டு. தகரை இலையை பறித்து சிறிது எலுமிச்சை சாறு விட்டு மென்மையாக அரைத்து வைத்துக் கொண்டு குளிப்பதற்கு சில மணிநேரம் முன் படர்தாமரை உள்ள இடத்தில் பூசி விட்டு பிறகு குளித்தால் சில நாட்களில் இது தீரும். தடவும் போது சிறிது எரிச்சல் கொடுத்தாலும், நோய் நீங்கி மகிழ்ச்சி கொடுக்கும்.

மண், அழுக்கு, புழுதியில் விளையாடும் சிறுவர்களுக்கு தொற்றாலும், உடல் சூட்டாலும் சிரங்கு வரும். அரிப்புடன் கூடிய சிறிய கொப்பளமாக தோன்றி ஆறாத சிரங்காக மாறுவதும் உண்டு. பெரும்பாலும் கோடை தொடங்கும் காலத்தில் வரும் இந்த பிரச்சினைக்கு தகரையின் இலையை பறித்து கொதிக்க வைத்து அந்த நீரைக் கொண்டு சொறி மற்றும் சிரங்கை கழுவி விட்டு இலையுடன் மஞ்சள் அரைத்து பற்றிட்டால் பறந்து போகும். 

தகரைப் படர்தா மரையைச் சொறியைத்
தகர வடிக்குமந்தந் தன்னோ- டிகலான
அத்தி சுரத்தையும் தஞ்செய்யு மிம்மூலி
யுத்தமமா மென்றே யுரை- 


என்கின்றது பழம்பாடல். 

No comments:

Post a Comment