Thursday, May 15, 2014

முன்னோர் வழங்கிய மூலிகை பட்டிடை


மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங்கருத் திதுதானே


மனித உறுப்புகளில் இன்றியமையாதது கண். இந்த கண்ணை குறித்து பல்வேறு சங்க இலக்கிய பாடல்களும் பேசுகின்றன. ராமாயணத்தில் கூட  ராமனும் சீதையும் இணைவதற்கு அவர்களின் முதல் பார்வை சந்திப்பே முக்கிய காரணம் என வர்ணிக்கப்படுகிறது. குழந்தைகள் படிக்கவில்லை  என்றால், கண்ணை மட்டும் விட்டு விட்டு உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் அடித்து உதையுங்கள் என முன்பெல்லாம் பெற்றோர் கூறுவது  வழக்கம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு, கண். அந்த கண்ணை தினந்தோறும் காப்பதற்கு இயற்கை படைத்த முக்கியமான துணை  உறுப்பு, இமை.

இவ்வளவு பாதுகாப்புடன் அமைந்துள்ள கண்ணை நோய் தொற்றினால் என்ன செய்வது? அதற்கு தான் ஒரு மூலிகையை முன்னோர் வழங்கியுள்ளனர்.  அது, தெய்வத்தன்மையுடைய கோயில்களில் இறைவனுக்கு சாத்தப்படும் பூச்சரங்களில் இடம் பெறக்கூடிய பூ. அதன் பெயர் பட்டிடை. கோயில்  நந்தவன பூங்காக்களில் வளர்க்கப்படும் செடி. எதிரெடுக்கில் கரும்பச்சை நிறத்துடன் இலைகளும், நடுவே வெள்ளை நிற பூக்களும் கொண்ட அழகிய  சிறு செடி. வீட்டு தோட்டங்களிலும் கோயில்களிலும் இது வளர்க்கப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் அழகு செடியாக வளர்க்கின்றனர். 3 முதல் 6  அடி உயரம் வரை வளரும்.

கண் நோய்க்கு பயன்படும் கண் காச மாத்திரை மற்றும் கண் நோய் தீர்க்கும் நண்டுக்கல் பற்பம் ஆகியவற்றில் பட்டிடை சேருகிறது. மேலும் கண்  நோய்க்கு தயாரிக்கப்படும் அனைத்து சித்த மருந்துகளிலும் பட்டிடைக்குதான் முதலிடம். ஆவணங்கள் எழுத உதவும் அழியாத மை தயாரிக்க பட்டிடை  பயன்படுத்தப்படுகிறது. 

வாசனை திரவியங்கள் தயாரிக்கும் பொருட்களிலும் வாசனை நீண்ட காலம் நிலைத்து நிற்க பட்டிடை பயன்படுத்தப்படுகிறது. இரும்பு பற்ற வைக்கும்  தொழிலாளர்கள் கண் சிவந்து தூங்க முடியாமல் வலியால் துடிப்பார்கள். இவர்கள் புதிய பட்டிடை பூவால் ஒத்தடம் கொடுக்க கண் எரிச்சல் நீங்கும்.  பூவை பறித்து தண்ணீரில் கழுவி கண்களை மூடி அதன் மேல் வைத்து மெல்லிய துணியால் கட்டிக்கொண்டு படுத்தால் கண் வலி பறந்து போகும்.  சிவந்த கண்கள் பழைய நிலைக்கு வந்து சேரும்.

நேத்திர வாயுகமழ் நேத்திரபுண் வெட்டருகல்
நேத்திரங் பாலசன்னி நீசவினைக்- கோத்திரங்கள்
மாள நொடுக்குதலால் வாகடர்கைக் கேற்றவச்ர
வாளஞ் சுயோதனனார் மாலை 
என்கிறது தமிழ்பாடல் ஒன்று.

பட்டிடை செடி மற்றும் பூவின் பாலில் நல்லெண்ணெய் விட்டு நன்றாய் கலந்து நெற்றியில் தேய்க்க கண் வலி நீங்கும். பழங்காலங்களில் போரில்  வெட்டு பட்டால் காயம் சீழ் பிடிக்காமல் ஆற பட்டிடை இலைகளை ஒடித்தால் வரும் பாலை பயன்படுத்தினர். இன்றும் கிராமங்களில் இதை  பயன்படுத்தி வருகிறார்கள்.பட்டிடை பூ 50 கிராம், களாப்பூ 50 கிராம் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு பூக்கள் மூழ்கும் வரை நல்லெண்ணெயை ஊற்றி  20 நாள் வெயிலில் வைத்து (இந்த தயாரிப்புக்கு சூரிய புடம் என பெயர்) வடி கட்டி காலை, மாலை வேளைகளில் கண்ணில் ஓரிரு துளிகள் விட்டு  வர பூ, சதை வளர்ச்சி, பலவிதமான கண்படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

இதன் வேரை வாயில் போட்டு மென்றால் பல் வலி நீங்கும். தண்ணீரை சிறிதளவு விட்டு அரைத்து கொட்டை பாக்கு அளவு உள்ளுக்கு கொடுக்க  வயிற்றுப் புழு சாகும். பட்டிடை பூ தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாக எடுத்து கசக்கி கண்களில் இரண்டொரு துளி விட்டு வர கண் பூ விலகும்.  பட்டிடை பூ செண்பகப் பூ, எள்ளுப்பூ இவற்றை சுத்தம் செய்து அதனுடன் துளசி வேர், சங்குப் பொடி ஆகியவற்றில் புளியம் பூ சாறு, எலுமிச்சை சாறு  ஆகியவற்றை அரைத்து நிழலில் உலர்த்தி வைத்து தாய்ப்பாலில் உரைத்து கண்களில் தீட்டி வந்தால் கண் வலி, பூ விழுதல், சதை வாங்கி  முதலியவை தீரும். 

இத்தனை பெருமைக்கும் உரிய பட்டிடை செடி எது தெரியுமா? தினந்தோறும் நாம் எளிதாக பார்க்க முடியும் நந்தியாவட்டை தான்.சங்க இலக்கியங்களில் பெண்கள் விளையாடி மகிழ்ந்த 96 வகை மலர்களில் ஒன்று, இந்த நந்தியாவட்டை. நந்தியாவ நேத்திர வாயுகமழ் நேத்திர புண்  வெட்டருகல், நந்தி பத்திரி, நந்தியா வர்த்தம், பட்டிடை, வலம்புரி, சுயோதனன் மாலை என பல்வேறு பெயர்கள் இதற்கு உண்டு.

காசம் படலம் கரும்பாவை தோடமெனப்
பேசுவிழி நோய்கடமை பேர்ப்பதன்றி- ஓசைதரு
தந்திபோ லேதெறித்துச் சாருமண்டை நோயகற்றும்
நந்தியாவட்டப்பூ நன்று
 என்கின்றது பழம் பாடல்.

இந்த அரிய மருத்துவ குணம் கொண்ட பட்டிடையாம் நந்தியாவட்டையை தகுந்த மருத்துவர்களின் ஆலோசனை பெற்று முன்னோர்கள் காட்டிய  வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

No comments:

Post a Comment