Friday, May 16, 2014

பக்கவாதத்தில் இருந்து மீளலாம்

பக்கவாத பாதிப்பு உலகெங்கிலும் பயத்தினை அளித்தாலும், ஒரு மகிழ்ச்சியான செய்தி... இதில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடிய மருத்துவ முன்னேற்றம் சமீபத்திய காலகட்டத்தில் ஏற்பட்டு உள்ளது. பொதுவாக இது 65 வயதை கடப்போருக்கு அதிகமாக பக்கவாத பாதிப்பு காணப்படுகிறது. 

வயதானவர்களைத்தான் இது அதிகமாக தாக்கும் என்பதில்லை. நடுத்தர வயதில் இருப்போருக்கும் வர வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இந்த பாதிப்பு அதிக இயலாமையை கொடுத்து விட்டாலும், தொடர் சிகிச்சை பயிற்சி மூலம் அவர்கள் நல்ல முன்னேற்றம் பெற முடிகிறது. பக்கவாதத்துக்கான அறிகுறிகள்...

* திடீரென முகதசை வலுவிழத்தல் (உதாரணம்) புன்னகைக்க முடியாது. 

* பேச்சு குழருதல். 

* கைகளை உயர தூக்க முடியாமை. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடி அவசர சிகிச்சை தேவை. இந்த சிகிச்சை, பாதிக்கப்பட்டவரை முழுமையாக குணப்படுத்த உதவும். `சி.டி. ஸ்கேன்' அல்லது `எம்.ஆர்.ஐ.' போன்ற சோதனைகள் மூளையில் ரத்த குழாய்களில் கசிவு, அடைப்பு இருப்பதனை காண்பிக்கும். 

4 மணி நேரத்துக்குள் இந்த அடைப்பினை நீக்குவது நோயாளிகளின் முன்னேற்றத்துக்கு உதவும். தொடர்ந்து தரப்படும் மருத்துவ சிகிச்சைகளும், பயிற்சிகளும் கண்காணிப்பும் நோயாளியின் முன்னேற்றத்தினை கூட்டும். 

* மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டலாம். அல்லது மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் உடலில் எங்கோ ஏற்பட்ட ரத்தக்கட்டி மூளை வரை பயணம் செய்தும் அடைப்பை ஏற்படுத்தலாம். 

* ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்பு, புகை பிடித்தல் ஆகியவைகளால் ரத்தக் குழாய் தடித்து விடலாம். 

* இருதய நோய் பாதிப்பும் பக்கவாதத்தினை ஏற்படுத்தலாம். மூளைக்குள் ரத்தக் கசிவினால் ஏற்படும் பாதிப்பு, நீண்ட கால ரத்த கொதிப்பு மற்றும் சில காரணங்களால் ஏற்படுபவை. இதன் பாதிப்பு சற்று கடுமையாக இருக்கும். சிகிச்சை முறையும் மாறுபடும். 

பொதுவாக பக்கவாதம் முக கோணல், கைபலவீனம் போன்ற சில நிரந்தரமற்ற சில மணி நேர பாதிப்புகளையும் கொடுக்கலாம். நீண்ட பாதிப்பில் சில மாதங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். மூளையில் எந்த இடம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்தே உடல்பாதிப்பும் அமையும். 

மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு என்றால் இடதுபக்க உடலில் பாதிப்பு ஏற்படும். அதுபோல மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு என்றால் உடலில் வலது பக்கம் பாதிப்பு வரும். வலது பக்கத்தில் பாதிப்பு என்றால் பார்ப்பது, கேட்பது, வேகம் போன்றவை தடைபடும். மூளையின் இடதுபக்க பாதிப்பு என்றால் பேச்சு, புரிதல், எழுதுதல், படித்தல் போன்றவை பாதிக்கப்படும். 

பொதுவாக ஏற்கனவே ஆரோக்கியம் இல்லாத உடல்நிலை உடையோர் அதிக பாதிப்பை அடைவர். சிலருக்கு சில நிமிடங்கள் அறிகுறி இருந்து பிறகு சரியானது போல இருக்கும். இவர்கள் இதனை அலட்சியமாக ஒதுக்கி விடாமல் உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். 

இதில் முன்னேற்றம் பெற பாதிக்கப்பட்டவரின் முழு ஈடுபாடும் தேவை. முன்னேற்ற முயற்சிகளில் ஒருசில பின்னேற்றங்களையும் அவ்வப்போது சந்திக்க நேரிடலாம். இது பாதிக்கப் பட்டவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சுமையாக இருக்க கூடும். இவர்களுக்கு மருத்துவ கவுன்சிலிங் தேவை. பாதிப்பு ஏற்பட்டவர் மருத்துவ சிகிச்சை பெறும்போது....

* எவ்வளவு சீக்கிரமாக உடல் அசைவுகள், நடைபயிற்சியினை செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக ஆரம்பிக்க வேண்டும். ஒரு பயிற்சியாளரின் உதவி தேவை. 

* பாதிக்கப்பட் டோருக்கு கை, கால்தசைகளில் ஒரு இறுக்கம் ஏற்படும். எனவே அன்றாட பயிற்சியே தசைகளின் இறுக்கத்தை நீக்கி கை, கால் அசைவினை எளிதாக்கும். 

* அன்பான குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு அவசியம். 

* நல்ல இசையை கேட்பது முன்னேற்றத்தினை கண்டிப்பாக தரும். 

* வாயை நன்கு திறந்து மூடுதல், கண்களை சிறிது இறுக்க மூடுதல் போன்ற முகப்பயிற்சியை அடிக்கடி செய்யவும். 

* மூன்றில் ஒருவர் பக்கவாதத்தில் இருந்து முழு நிவாரணம் பெற முடிகிறது. எனவே மூளையையும் சுறுசுறுப்பாக வைக்க குறுக்கெழுத்து போட்டி, செஸ், புதிர் போன்ற விளையாட்டுகளை மேற்கொள்ளவும். 

* வைட்டமின் `பி' சத்துக்கள் (பி1, பி6, பி12) பக்கவாத பாதிப்பு முன்னேற்றத்துக்கு நன்கு உதவுகின்றது. பக்கவாத பாதிப்பில் இருந்து விரைவில் முன்னேற...

* புகை, மதுவை நிறுத்தி விடுங்கள். 

* உடற்பயிற்சியின் அளவினை கூட்டுங்கள். 

* கருத்தடை மாத்திரைகள் மற்றும் சில ஹார்மோன் சிகிச்சை பெறுவோர் இவற்றுக்கான மருத்துவ ஆலோசனையை கண்டிப்பாக பெற வேண்டும். 

* ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை இவை அனைத்தும் நல்ல கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும். சீக்கிரம் நலம் பெற....

* மனம் உடைந்து விடாதீர்கள். மனப் புழுக்கம் நோயை அதிகப்படுத்தி விடும். 

* சின்னச்சின்ன வேலைகளை உங்களால் முடியும் என்று நம்பி முயற்சியுங்கள் (உ.ம்) கூடுதலாக 5 நிமிடம் நில்லுங்கள். பிறர் உதவியோடு மாடி ஏறி இறங்குங்கள். 

* இருந்த இடத்திலேயே கை, கால்களை மடக்கி சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யுங்கள். 

* உங்களுக்கு தேவையான விதத்தில் உங்கள் சுற்று வட்டாரத்தை வைத்துக் கொள்ளுங்கள். 

* வாய்விட்டு பேச முயற்சியுங்கள். வார்த்தைகளை அடிக்கடி உச்சரியுங்கள். 

* தொடர் பயிற்சி பேச்சில் நல்ல முன்னேற்றம் தரும். சற்று சோகமாக தோன்றும் போது உங்கள் சூழ்நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். (உ.ம்) டி.வி. பார்ப்பது, படிப்பது, மற்றவர்களோடு பேசுவது, இசையை ரசிப்பது. பக்கவாதத்தினால் பாதிப்பு ஏற்பட்ட அனேகர் இன்று அலுவலகங்களுக்கு சென்று கொண்டு, அன்றாட வாழ்க்கையை சந்திக்கிறார்கள். 

தொடர் மருத்துவ சிகிச்சையும் சற்று கூடுதல் கவனிப்பும் உங்களையும் சராசரி மனிதராக மாற்றி விடும் என்பதை நம்புங்கள். 

டாக்டர் கமலி ஸ்ரீபால்.

No comments:

Post a Comment